தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-10-MM-34 என்ற பதிவெண் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது 116 இந்திய மீனவர்களும், 184 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீனவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாகக் கைது செய்யப்படும் சம்பவங்கள் மீனவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மட்டுமல்லாமல், அவர்களை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிப்படையச் செய்கிறது. எனவே, இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், இந்தியப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரியத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.