திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6 வது மாநில மாநாட்டை ஒட்டி அங்குள்ள கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக மாநாடு அரங்கிற்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மாநாட்டில் மீன்கள் இனப்பெருக்க மீன்பிடி தடைக்காலத்தில் தற்போது வழங்கப்படும் 8000 ரூபாயை, 18,300 உயர்த்தி தரவேண்டும், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்து படகு உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தும், ஒன்றிய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மௌனம் சாதித்து வரும் நிலையில் தமிழக அரசு உடனடியாக இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், மீனவர் நல வாரிய செயல்பாட்டினை மேம்படுத்துவது, மீன் பாசி குத்தகை விடுவதற்கு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வகம் அமைப்பதற்காக இடம் கொடுத்த மீனவ குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்க வேண்டும், அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசும், அதானி துறைமுக நிர்வாகமும் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.