
தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு 18.09.2021 அன்று அனுப்பப்பட்டது. இருப்பினும் ஆளுநர் 5 மாத காலத்திற்குப் பிறகு, இந்த சட்ட மசோதாவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். அதன் பின்னர் 08.02.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த மசோதா, ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து வந்தது. இந்த மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர்கல்வித் துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருந்தது.
இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “மத்திய அரசு நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்கச் செய்தியை இந்தப் பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.04.2025) மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீட் தேர்வு குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (09.04.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் மூத்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்வர் மு.க. ஸடாலின் பேசுகையில், “தமிழகத்தில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளைக் கடந்த 2006ஆம் ஆண்டு கலைஞர், ரத்து செய்தார். இதனால், கல்லூரிகளில் ஏழை எளிய மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. எனவே தான் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வைத் தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது.

அக்குழு அளித்த பரிந்துரையின் படி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால் ஆளுநர் தனது கடமையைச் செய்யாமல் நீண்ட காலம் கிடப்பில் போட்டு அந்த மசோதாவைத் திரும்ப அனுப்பினார். இருப்பினும் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். அதோடு பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் இதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரினோம். நீண்ட போராட்டத்தின் விளைவாக ஆளுநர் அம்மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மேலும் அதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி பல முறை கடிதம் வாயிலாகவும் நேரில் சந்தித்தும், நாடாளுமன்றத்தில் பேசியும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை ஏற்காமல் அம்மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது. இதனால், நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையாது” எனப் பேசினார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து வாசித்தார். அதில், “நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிராகத் தேவையிருப்பின் புதிய வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்தார். அதே சமயம் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.