இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் அதன் வேகம் மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளிலேயே படுக்கைகளில் இடம் இல்லாததால், தொற்று பாதித்தவர்கள் வெகு நேரம் ஆம்புலன்ஸில் காத்திருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் இருந்து மருத்துவமனைகளுக்குச் செல்ல ஆம்புலன்ஸ் விரைவில் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதனால், சென்னையில் நோய்த் தொற்றின் தாக்கத்தை சமாளிக்க, 250 புதிய கார் ஆம்புலன்ஸ் சேவையை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நோய்த் தொற்று அபாயம் அதிகரித்துவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் வசதி போதுமானதாக இல்லாததால் அரசு உடனடியாக 250 ஆம்புலன்ஸ்களைப் புதிதாக வாங்கி, அதை நேற்று (12.05.2021) முதல் சென்னையில் செயல்பட வைத்துள்ளனர்.
இந்தப் புதிய கார் ஆம்புலன்ஸ் சேவையை திமுகவின் முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என். நேரு கொடியசைத்து துவங்கிவைத்தார். புதிதாக பொறுப்பேற்றிருக்கக் கூடிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்து இந்த சேவையை தொடங்கி வைத்துள்ளனர்.