Skip to main content

விவசாயம் காக்க... மூஞ்சுருகளை பூட்டி ஏர் ஓட்டும் பிள்ளையார்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

விநாயகர் சதுர்த்திக்கான நாட்கள் நெருங்கிவிட்டது. ஊர் ஊருக்கு பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தவும் மக்கள் தயாராகிவிட்டனர். அதற்காக மண்பாண்ட கலைஞர்கள் இரவு பகலாக பிள்ளையார் சிலைகள் செய்து வருகிறார்கள்.

 

 To protect agriculture... different vinayagar statue in pudukottai

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர் மற்றும் அறந்தாங்கி அருகில் உள்ள துவரடிமனை கிராமங்களில் அதிகமான களிமண் பிள்ளையார் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. அறந்தாங்கி அருகில் உள்ள துவரடிமனை கிராமத்தில் பிள்ளையார் சிலைகள் செய்யப்படும் இடத்தில் மண்பாண்ட கலைஞர் பழனிச்சாமி வித்தியாசமான பிள்ளையார் சிலைகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஏர் ஓட்டும் பிள்ளையார் சிலை. தனது வாகனமான மூஞ்சுருகளை காளைகளாக பழைய மரக்கலப்பையில் பூட்டி பிள்ளையார் சாட்டை குச்சியோடு உழவு செய்யும் அற்புதமான படைப்பை செய்து வைத்திருந்தார். மேலும் பல சிலைகள் இருந்தாலும் இந்த சிலைகள் காண்போரை கவர்ந்து வருகிறது. 

 

 To protect agriculture... different vinayagar statue in pudukottai

 

இது குறித்து பழனிச்சாமி கூறும் போது.. உள்ளூர்ல மண் கிடைக்கல 3 ஊர்கள்ல இருந்து மண் வாங்கி வந்து கலந்து தான் பொம்மைகள், சாமி சிலைகள் செய்யனும். தொழில் ரொம்பவே நலிவடைந்து போனதால இளைஞர்களும் இதில் ஆர்வம் இல்லாமல் இருக்காங்க. ஏதோ எங்கள் தலைமுறை ஆட்கள் இருக்கும் வரை இந்த மண் வேலைகள் நடக்கும். சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் மண்பாண்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

ஒவ்வொரு வருசமும் பிள்ளையார் சிலை செய்வேன். அதேபோல இந்த வருசமும் 2 மாசம் முன்னால இருந்து வேலை தொடங்கி செய்றேன். பலபேர் ஆர்டர் கொடுத்திருக்காங்க. ஆர்டர் இல்லாம அவசரத்துல வந்து கேட்பாங்க. அவங்களுக்காகவும் சிலைகள் செய்றோம்.

 

 To protect agriculture... different vinayagar statue in pudukottai

 

சிலட்டூர் பாலா என்கிற தம்பி 3 வருசமா பிள்ளையார் அதன் வாகனங்களை காளைகளாக பூட்டி ஏர் பிள்ளையார் ஏர் ஓட்டுறது மாதிரி செய்ய சொன்னார். 2 வருசமா வேலை பளு செய்ய முடியல. இந்த வருசம் அந்த தம்பிய ஏமாற்றாம ஏர் ஓட்டும் பிள்ளையாரை செஞ்சுட்டேன். விவசாயத்தை விட்டு வெளியேறும் இளைஞர்களை விவசாயம் நோக்கி திருப்ப இந்த பிள்ளையார் ஏர் ஓட்டுறார் என்றார். 

சிலட்டூர் பாலா கூறுகையில், சில வருடங்களுக்கு முன்னாலயே பிள்ளையார் மூஞ்சுருகளை பூட்டி ஏர் ஓட்டுறது போல சிலை செய்ய சொன்னேன். இந்த வருசம்தான் அது சாத்தியமாகி இருக்கு. அதாவது.. நானும் வெளிநாடு போய் வந்தவன்தான். இப்ப உள்ளூர்ல எலக்ட்ரசியன் வேலை செய்றேன். ஆனாலும் விவசாயத்தின் மேல ஆர்வம். ஆனால் இன்றைய தலைமுறை விவசாயத்தை விட்டு நகரங்களை நோக்கி போறாங்க. அதை மாற்றி விவசாயத்தில் அவர்களை ஈடுபடுத்த மாற்றி யோசித்தேன். அதாவது நீங்க மறக்கும் விவசாயத்தை நான் செய்றேன். நீங்களும் விவசாயம் செய்ய வாங்க இளைஞர்களேனு அழைப்பது போலதான் இந்த ஏர் ஓட்டும் பிள்ளையார். அதனாலதான் பிள்ளையார் தனது வாகனங்களை பூட்டி ஏர் ஓட்டுவது போல செய்ய சொன்னேன். 

 

 To protect agriculture... different vinayagar statue in pudukottai


இப்ப வீட்ல இதற்காக தனியாக ஒரு செட் போட்டு தானியங்கள் வளர்த்து வருகிறேன். அதாவது ஒரு பக்கம் தானியம் விளைந்து கிடக்கும். அடுத்த பக்கம் விதைகள் முளைத்து வரும், அடுத்த பக்கம் விதைக்க உழவு நடக்கும். அதுதான் நம்ம விவசாய முறை. அதேபோல செட் போட்டுக்கிட்டு இருக்கிறேன். சில நாட்கள் அந்த செட்டில் இந்த பிள்ளையார் ஏர் ஓட்டுவார். அதை பார்க்கும் போது ரொம்ப அருமையாக இருக்கும். 20 நாட்கள் வைத்திருப்போம் என்றவர் விவசாயம் காக்க இளைஞர்கள் வர வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்