நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக ,புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையை தொடங்கினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கே சென்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய வரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் சந்திப்பு மேற்கொண்ட நிலையில், அதிமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதனுடனும் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.