
மேற்குவங்க மாநிலம் மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்தபோது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம். அது குறித்து ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளது. அதைக் கண்ட அருகில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களைத் தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து ரஹிம்ஷா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.