கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கையில் ஒரு சவரன் தங்க நகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு பிரெட் பாக்கெட் 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இந்த அளவுக்கு நிதி சிக்கலைச் சந்தித்துள்ள இலங்கைக்குக் கூடுதல் பொருளாதார பாரத்தை கூட்டியுள்ளது உக்ரைன்-ரஷ்ய போர். பெட்ரோல், டீசல், பருப்பு, அரிசி, எண்ணெய் என அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்து மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. இலங்கை பொதுமக்கள் கடும் விலை உயர்வால் வாழ்வை நகர்த்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 22 ஆம் தேதி தலைமன்னாரிலிருந்து தமிழகம் தப்பித்து வர முயன்ற 6 பேரை தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் இந்தியக் கடலோர காவல்படை அதிகாரிகள் பிடித்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாகியிருந்தது.
பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என விசிக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் பேசுகையில் ''இலங்கையில் பரிதவித்துக்கொண்டிருக்கிற தமிழர்கள் தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தமிழகம் வரும் ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தித் தரும். ஈழத்தமிழர்களின் விவகாரத்தை சட்டரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது'' என தெரிவித்தார்.