வார நாட்களில், பரபரப்பான நேரங்களில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை) பரபரப்பான நேரங்களில், 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவேளியில் இயக்க முடிவுசெய்துள்ளது.
எனவே, நாளை (12/02/2021) முதல் மெட்ரோ ரயில் சேவைகள், பரபரப்பான நேரங்களில் (Peak Hours) காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் (Non- Peak Hours) காலை 05.30 மணி முதல் காலை 08.00 மணி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மற்றும் இரவு 07.00 மணி முதல் 10.00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், இரவு 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 28 நிமிடங்களுக்குப் பதிலாக, 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுவதும் பரபரப்பில்லா நேரங்களில் (Non- Peak Hours) 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.