![New air pressure is created; Rain for Tamil Nadu till 18th](http://image.nakkheeran.in/cdn/farfuture/vOSp8jJocE0qvkqJlCwE2nbs0pMpQ3XUaiFmyozvTEo/1671014168/sites/default/files/inline-images/107_31.jpg)
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அந்தமான் கடற்பகுதியில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தற்போது வலு குறைந்த காற்றழுத்தப் பகுதியாகவே உள்ளது. இது கூடுதலாக வலுவடைய வாய்ப்புள்ளதா என அடுத்தடுத்த தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தில் வருகிற 18-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை தமிழகம் - புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 ஆம் தேதிக்குப் பின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.