நெல்லை மாவட்டம் வி.கே.புரம் நகரின் ஜன சந்தடியுள்ள மெயின் பஜாரின் மூன்று லேம் பஸ் நிறுத்தம் பக்கமுள்ள ரத்னா ஜூவல்லரி நகைக்கடையின் உரிமையாளர் ராஜ்.
பரபரப்பான இவரது நகைக்கடையில், கடந்த நவம்பர் 6- ஆம் தேதியன்று கடையின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வர போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அச்சமயம் 600 கிலோ வெள்ளி விலைமதிப்புள்ள தங்க நகைகளும் கொள்ளை போயுள்ளது. மதிப்போ பல லட்சம் பெறுமானது என்று தகவல்கள் கிளம்ப, மாவட்டமே பரபரப்பானது.
அப்போது திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகள் கிலோ கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டு மாநிலமே பரபரப்பான சமயம் இந்தக் கொள்ளையும் பீதியைக் கிளப்பியது. உயர் போலீஸ் அதிகாரிகள் கூட வி.கே.புரத்தில் மையமிட்டனர். மேலும் கடையின் வெப் கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் புட்டேஜையும் எடுத்து சென்றது தெரிய வர, வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் டைகர் எந்தப் பக்கமும் போகவில்லை யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
விரல் கைரேகைப் பிரிவு துணை கண்காணிப்பாளர் கைரேகை நிபுணர் அகஸ்டா கண்மணி கைரேகைகளைப் பதிவு செய்தார். பலனில்லை. தொடர்ந்து கடையின் மொத்த ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்த பிறகே கொள்ளை போனது 3 கிலோ வெள்ளியும், 600 கிராம் தங்கநகை மட்டுமே என தெரியவந்தது. தவிர வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் எஸ்.ஐ.க்கள் மணிகண்டன், மாரிமுத்து ஆகிய தனிப்படையினர் புலனாய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே நெல்லை மற்றும் குற்றாலத்தைச் சேர்ந்த இருவரை வெளியூரில் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்ததுடன், அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் நடந்த கொள்ளையிலும் தொடர்பிருப்பது தெரியவர அந்த இருவரையும் ஷேடோ செய்யத் தொடங்கியுள்ளது தனிப்படை. கொள்ளையர்கள் பிடிபட்டால் மொத்த தங்கக் கொள்ளையின் மதிப்புகள் வெளிக் கிளம்பலாம்.