Skip to main content

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Nellai Mayor Saravanan resigns

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார். மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Nellai Mayor Saravanan resigns

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 16 வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இது குறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராகப் புகார் மனு அளித்திருந்தனர். அதே சமயம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து மேயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கோவை, நெல்லை என அடுத்தடுத்து ஒரே நாளில் இரு மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கோவை, நெல்லை மேயர்கள் மீதான புகார் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தி இருந்தார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இரு மேயர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாஞ்சோலை விவகாரம்; புலிகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக வனத்துறைக்குக் கடிதம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Manjolai Affair Tiger Conservation Commission letter to Tamil Nadu Forest Dept

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அதே சமயம் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வற்புறுத்தி வெளியேற்றுவதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக வனத்துறையிடம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வனப்பாதுகாவலருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலமூக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி கிராமங்களில் உள்ள பாரம்பரிய பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்பாக கிருஷ்ணசாமியின் கடிதம் வரப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த உண்மை நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை விரைவில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
AIADMK leader killed; 8 people including DMK executive arrested

சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

AIADMK leader killed; 8 people including DMK executive arrested

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவரான திமுக நிர்வாகி சதீஷ் அந்தப் பகுதியில் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சண்முகமும் சதீஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்து லாட்டரி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்குள் தொழில் மற்றும் அரசியல் ரீதியாகவும் போட்டி ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து விரோதிகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் தனிப்பட்ட முறையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அது குறித்து சண்முகம் காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ் அதிமுக நிர்வாகி சண்முகத்தை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.