முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையான வழக்கில் கொலையாளியாக கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு ஐந்து நாள் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது நெல்லை நீதிமன்றம்.
கடந்த 23ந் தேதி நெல்லை ரெட்டியாப்பட்டியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் உட்பட மூவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். படுகொலைகளின் விசாரணையில் முன்விரோதம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தகராறில் கார்த்திக்கேயன் என்பவரை கைது செய்து ஆகஸ்ட் 14ம் தேதி வரை சிறையிலடைத்தது நெல்லை மாநகரக்காவல்துறை. இச்சூழலில், வழக்கின் முக்கியத்துவம் கருதி மேல் விசாரணைக்காக வழக்கு கடந்த 29ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வேளையில், சிறையிலுள்ள கார்த்திக்கேயனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலிசார், நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் 06.08.19 அன்று மனு செய்திருந்த நிலையில், வரும் 12.08.19 வரை சிபிசிஐடி விசாரணைக்கு எடுக்க நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி பாபு இன்று உத்தரவிட்டார். சிபிசிஐடி ஐஜி சங்கர் நெல்லையில் முகாமிட்டுள்ள நிலையில், சிறையிலிருக்கும் கார்த்திக்கேயனை தங்கள் கஸ்டடி எடுத்து இன்று மாலை முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.