வட சென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மசூத் - சௌமியா தம்பதியினர். இதில் சௌமிய கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி திடீரென சௌமியாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கன்னிகாபுரம் பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் சாலையில் தண்ணீர் இருந்ததால் சௌமியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்பதால் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீன்பாடி வண்டி உதவியுடன் குழந்தை முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சௌமியாவையும், குழந்தையையும் கொண்டு சென்றனர். அங்கு சௌமியாவிற்கு தேவையான அனைத்து சிகிச்சையும் அளித்துள்ளனர்.
பின்னர் இறந்த குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறந்த குழந்தையை துணியால் சுற்றி கொடுக்காமல், மருத்துவமனை பிணவறை ஊழியர் அட்டைபெட்டியில் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில், அரசு மருத்துவமனையின் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெற்றோர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பிரேத பரிசோதனை செய்தால் உடல் முழுவதும் வெள்ளை துணிகளை கட்டிக்கொடுப்பது வழக்கம். ஆனால் பெற்றோர்கள் குழந்தையின் உடலை துணிகள் வைத்து சுற்றித்தர வேண்டும் என கேட்டிருந்தால் நாங்கள் சுற்றிக் கொடுத்திருப்போம். அவர்கள் எதையும் கேட்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.