![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/pEox1bGCVXgbKNTz7fpbi-ToZBJQwt_NwsQ5IXeHn8c/1631597423/sites/default/files/inline-images/23_33.jpg)
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பரமணியன் கூறியதாவது, "இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசு சார்பாக மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்டதில்லை. முதன்முதலாக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா சோதனை மாதிரிகளை பெங்களூருவுக்கு அனுப்பி, அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு சோதனைக்கு ரூபாய் 5,000 செலவானது. இதனால் தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கரோனா பாதித்த சில மாணவர்கள் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். மாணவர்களிடையே அச்சமற்ற சூழல் உள்ளது. 1 - 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளோம். பள்ளி திறப்பு குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார். நீட் தேர்வு தொடர்பான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம் என்று நாங்கள் கூறியதாக தவறான தகவலை சிலர் பரப்புகிறார்கள்" என்றார்.