நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமைறைவாகிய நிலையில், மாணவர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மாணவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் போதிய முகாந்திரம் உள்ளதால், மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும், சிபிசிஐடி முன் விசாரணைக்கு நேரில் ஆஜரானால், முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். மேலும் நீட் தேர்வு முறைகேடு உறுதியானால், அது எளிதில் கடந்து செல்லக்கூடிய விசயம் அல்ல என தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் முழுவதும் எப்போது சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்று அரசுக்கு கேள்வி நீதிபதி எழுப்பினார்.