வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அங்கிருந்த மர நிழலில் எப்போதும் போல் போலிஸார் அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு ஒரு பெண்மணி, தனது தோள் அளவுக்கு வளர்ந்த இரண்டு மகள்களுடன் வந்தார். அவர் தன் மீது கேனில் கொண்டு வந்துயிருந்த மண்ணெண்ணையை ஊற்றினார். இதனைப்பார்த்த அங்கிருந்த மக்களும், போலிஸாரும் பாய்ந்து ஓடிவந்து தடுத்து நிறுத்தினர்.
தனது பெயர் மெர்லின்மேரி என்றும், தனது கணவர் ராஜா, தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும், தன் மகள்களையும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். இதுப்பற்றி வேலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தீ குளிக்க முயற்சி செய்தோம் எனச்சொன்னார். அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று போலிஸார் விசாரணை நடத்தியவர்கள், மே 31ந்தேதி மீண்டும் காவல்நிலையம் வாங்க விசாரிக்கிறோம் எனச்சொல்லி அனுப்பிவைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறினர்.