எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கி தொடங்கி தற்பொழுது நடைபெற்று முடிந்தது. கரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு நடக்கும் தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதினர். தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடந்தது.
தமிழ்நாட்டில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இளநிலை நீட் தேர்வு இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நிலையில் தேர்வு மாலை 05.00 மணிக்கு முடிந்தது. அதேபோல் புதுச்சேரியில் 14 மையங்களில் நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் 'என் 95' முகக்கவசம் வழங்கப்பட்டது.
நடைபெற்ற நீட் தேர்வில் உயிரியல் பாடம் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் சென்னை மாணவி ஒருவர் தெரிவித்தார். அதேபோல் இயற்பியல் வினாக்கள் கடினமாக இருந்தது. உயிரியல் வினாக்கள் எளிதாக இருந்ததாக கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.