நீட் தேர்வுக்கு போராட்டம் நடத்திய 81 பேர் மீது பொய் வழக்கு போட்ட அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வின் மூலம் அரியலூர் மாணவி அனிதா மத்திய, மாநில அரசுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட அனைத்து இயக்கங்களும், கட்சிகளும், மாணவ அமைப்புகளும் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு நீட் தேர்வை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று மாணவர்களை நம்ப வைத்து 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தங்கள் பதவியை தக்க வைத்து கொள்ள மத்திய அரசிடம் சரணாகதி அடைந்தது. விளைவு மாணவி அனிதாவை போல் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தகுதி இருந்தும் மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக போராடுவோம் என்று தற்போது கூறிக்கொண்டே தன்னெழுச்சியாக மாணவர்கள் ஜனநாயக அடிப்படையில் நடத்தும் போராட்டங்களை முடக்கும் நடவடிக்கையினை கடுமையாக எடுத்து வருகின்றது.
மதுரையில் நீட் தேர்வுக்கு எதிராக தமுக்கம் தமிழன்னை சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 5 மாணவிகள் உட்பட 81 பேரை தமிழக அரசு அநியாயமாக சிறையில் அடைத்துள்ளது. 29 மாணவர்கள் மீது காவல்துறையின் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், 4 வழக்கறிஞர்கள் உட்பட 52 பேர் மீது அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது. அடக்குமுறையின் மூலம் நீதிக்கான போராட்டங்களை நிச்சயம் முடக்க முடியாது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அடக்கு முறையினை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் போராட்டத்தை வீரியப்படுத்தும். தமிழக மக்கள் அநீதிக்கு எதிராக வீதிக்கு வரவேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், மதுரையில் பொய்வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்.