![need change in the grievance meeting ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/KvgFTVDM7uW7UkVR3HEfo4VYtrPFRE4Gjovww-rFY_8/1600773265/sites/default/files/inline-images/public_2.jpg)
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்ட அரங்கில் காத்திருப்பார்கள். அப்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள், தகுதி இருப்பின் உடனடியாக தீர்வு காண்பதும் அதில் சிக்கல்கள் இருப்பின் அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு காண அறிவுறுத்தப்படுவதும் நடைமுறை. அதேபோன்று, பட்டா மாற்றம், அரசு உதவித்தொகை பெற, புதிய குடும்ப அட்டை பெற, மாற்றுத் திறனாளிகளின் குறைகள்- தேவைகள், இப்படிப் பல்வேறுபட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவைகளுக்குத் தீர்வு காணப்படுவதும் வழக்கம்.
கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும், மக்கள் குறை கேட்புக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா பரவல் மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர்கள் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டத்தினை இணையத்தளம் வழியாக நடத்துகின்றனர். அதனால் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள் ஆகிய இடங்களில் சென்று தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா மூரி, கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தளம் மூலம் திங்கள்கிழமை தோறும் மக்களின் குறைகளைப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகளை தீவிரமாகச் செயல்படுத்திவருகிறார்.
இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காரணம், மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்கு 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும். இப்படி மனுகொடுக்கச் செல்வதற்கு பஸ் செலவு, சாப்பாட்டுச் செலவு, பயண நேரம் இவையெல்லாம், இணையவழிக் கூட்டத்தால் மிச்சம் ஆகின்றன. அருகில் உள்ள இ-சேவை மையங்கள், கம்ப்யூட்டர் சென்டர்களில் சென்று தங்கள் குறைகளை இணையவழி மூலம் ஆட்சியருக்கு அனுப்பும் செலவு சுமார் 20 முதல் 60 ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறது.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
இப்படி, இணையத்தளம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, வாரம்தோறும் திங்கள்கிழமை, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களில் இருந்தும் வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வர வேண்டும். தற்போது இணையவழி குறைகேட்புக் கூட்டமாக மாற்றப்பட்டு நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலகங்களில் இருந்தபடியே கணினியில், மனுக்களைப் பெற்றுக்கொள்கின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, வீடியோ கான்ஃப்ரன்சில் அலுவலக குறைககளைப் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறி, அந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் பணிச்சுமை, பயணச் சுமை, நேரச் சுமை குறைகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் நிறைய செலவுகள் குறைகின்றன. உதாரணத்திற்கு அதிகாரிகளின் வாகனங்களுக்கு போடப்படும் டீசல், பெட்ரோல் போன்ற போக்குவரத்துச் செலவுகள், வாகன தேய்மானம் இவைகள் அனைத்தும் அரசுக்கு மிச்சம். ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்படும் புகார் மனுகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும். அப்படி காலதாமதம் செய்யும் அரசு அதிகாரிகளையும் அலுவலர்களையும் இணையவழி மூலமே தொடர்புகொண்டு கேள்வி கேட்பதற்கும் வழிவகை உண்டு.
![Nakkheeran](http://image.nakkheeran.in/cdn/farfuture/6RiFEyhHVqtNxsjCI0cOZCb6jQU2haFy8y-HXHFrE28/1599145511/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01_31.gif)
இதனால் பெருமளவில் லஞ்சம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, தமிழகம் முழுவதும் இதேபோன்ற நடைமுறையை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.