நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.