புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு அண்மையில் தென் மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த கல்வியாண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கவோ அல்லது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவோ முடியாது என்பதே இந்த அதிர்வலைக்கு காரணம். பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகள் மேற்கொள்ள ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும். புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும். மருத்துவ ஆணைய அறிவிப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆணைய கட்டுப்பாட்டால் எதிர்காலத்தில் புதிய மருத்துவமனைகள், முதலீடு வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.