நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்வு காண, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் தேசிய லோக் அதாலத், இன்று (12/12/2020) நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கும் வகையில், இந்த ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 'லோக் அதாலத்' நடத்தப்படும். அதன்படி இன்று (12/12/2020) மக்கள் நீதிமன்றங்களை நடத்த தேசிய லோக் அதாலத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று (12/12/2020) தமிழகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இன்றைய லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பான காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர்கள் தகராறு வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 115 வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதேபோல, நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள, சமரசம் செய்யத்தக்க காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 79 ஆயிரத்து 962 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகளில் தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தவிர, தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 354 அமர்வுகள் அமைக்கப்பட்டு, வழக்குகளில் தீர்வு காண உள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட நீதிபதியுமான கே.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
கரோனா காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைகளில் இன்று (12/12/2020) மக்கள் நீதிமன்றம் நடத்தபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.