Skip to main content

மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் 'பந்த்'! - தொழிற்சங்கக் கூட்டுக் குழு அறிவிப்பு

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Nation wide bandh
                                                            சின்னசாமி


‘பாரத் பந்த்’ எனப்படும் இந்தியா முழுமைக்குமான வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது தேசிய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு.

 

இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநிலச் செயலாளர் சின்னசாமி, “இந்தியா, பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, அரசியல் சாசன சட்டத்திற்குட்பட்டு தனது ஆட்சி அதிகாரத்தை நடத்த வேண்டும். மக்கள் ஏற்கனவே சட்டத்தின் மூலம் பெற்று வந்த பலன்களைத் தடுக்கக் கூடாது. மாற்றுக் கருத்தைப் புகுத்தி, சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. ஆனால் மத்திய பா.ஜ.க மோடி அரசு, இதற்கு நேர் எதிராகத் தனது செயல்பாட்டைத் திட்டமிட்டுச் செய்கிறது. 
 

இடதுசாரி இயக்கங்களின் நீண்ட காலப் போராட்டத்தின் பயனாக தொழிலாளர்களுக்கான பணிப் பாதுகாப்பு, ஊதியம், சலுகைகள், அனைத்தும் சட்டமாக்கப்பட்டது. ஆனால், இவைகளை நீர்த்துப்போக வைத்து, புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றுகிறது இந்த அரசு. இதனால், பெற்று வந்த சட்டப்படியான உரிமைகளைப் பறித்து, முதலாளித்துவக் கோட்பாட்டுக்கு வழிவகை செய்துவிட்டது மோடி அரசு.


கொண்டு வருகிற புதிய சட்டங்களைக் கண்டித்து நவம்பர் 26-ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தேசிய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டி.சி.யு, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எஃப், உள்ளிட்ட அனைத்துச் சங்கங்களும் இணைந்து நடத்துகிறது. 


மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்கள் விரோத சட்டத் தொகுப்புகளையும், மின்சாரத் திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் இந்த அரசு திரும்பப்பெற வேண்டும்.  அடுத்ததாக வருமானவரி கட்டுமளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்துக் குடும்பங்களுக்கும் கரோனா நிவாரணமாக மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்.

 

cnc

 

ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள் வேலையாக உயர்த்தி, நகரப் பகுதிகளுக்கும் அதை விரிவுபடுத்தி, அதில் வழங்கப்படும் கூலியை அதிகப்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 


குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை, தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மையப்படுத்துவதைக் கைவிடவேண்டும். இப்படி மக்கள் நலன், தொழிலாளர் நலன் சார்ந்த  கோரிக்கைகளை வலியுறுத்திதான் மத்திய அரசைக் கண்டித்து 26ஆம் தேதி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரியான சம்மேளனங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தமும், மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது.

 

மத்திய அரசை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும்தான், இந்த பந்த் நடக்கிறது. தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநிலக் கட்சிகள், தமிழகத்தில் தி.மு.க கூட்டணி தோழமைக் கட்சிகளும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம்தான் மக்கள் விரோத அரசுக்கு எதிர்ப்புகளைக் காட்ட முடியும் " என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்