![Natarajan spoke about the stadium he built](http://image.nakkheeran.in/cdn/farfuture/JzC1khcGB7jKbjqIKzy6Gunxb2f1tFYQMRDpE7rULVo/1687516635/sites/default/files/inline-images/2_270.jpg)
கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி போன்றோர் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரம் யோகிபாபுவும் இவ்விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “2010 ஆம் ஆண்டு நாங்கள் பேசிக்கொண்டு இருந்த கனவு நினைவாகும் போது மிக ஆச்சர்யமாக உள்ளது. மிக பெருமையாக உள்ளது. இங்கிருந்து அதிகமான வீரர்களை உருவாக்கி அனுப்ப வேண்டும்.
கிரிக்கெட் பிரபலங்கள் அதிகமானோர் வந்துள்ளார்கள். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணம். 14 வயது முதல் 19 வயதுடையவர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் தான் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். இது இலவசமாக செய்யவில்லை. கட்டணம் வசூலிக்கிறோம். இது எனக்காக நான் செய்து கொள்ளவில்லை. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். மைதானத்தை பராமரிப்பது எவ்வளவு கடினம் என உங்களுக்கே தெரியும். அதற்காகவாவது பணம் வாங்கியாக வேண்டும்” என்றார்.