புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாக கூட்ட அரங்கில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சனையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தமிழக அரசியல்வாதிகள் பற்றியும், தமிழக மக்களை கோழைகள், சுயநலவாதிகள் என்றும் விமர்சித்துள்ளார். கிரண்பேடிக்கும், தமிழகத்துக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. தமிழர்களின் வீரம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பிரச்சனையை எழுப்பி வெளிநடப்பு செய்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் பேசியுள்ளார். நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை டி.ஆர்.பாலு எம்.பி. எழுப்பி உள்ளார்.
கவர்னர் கிரண்பேடி தான் வகிக்கும் பதவிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார். அவர் தனது சட்டப்படியான கடமையை மட்டும் செய்யவேண்டும். அதிகாரிகளை அழைத்து அவர் பேசலாம். ஆனால் முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தெரியாமல் எந்த உத்தரவினையும் அவர் பிறப்பிக்கக் கூடாது. முடிவுகளையும் எடுக்கக் கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளது. அதை தீர்க்க அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.
மத்திய அரசு கடன் தள்ளுபடி, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிதி, டெல்லியைப்போல் புதுச்சேரியிலும் ஓய்வூதியவர்களுக்கான தொகையை மத்திய அரசே வழங்கவேண்டும், புதுச்சேரிக்கு வழங்கப்படும் மானியத்தொகையை 26 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை தொடர்ந்து 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றார்.