Skip to main content

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் புதிய நடைமுறை! என்.இ.சி.சி. அதிரடி முடிவு!!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

namakkal egg price necc new method announced

 

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு எனப்படும் என்.இ.சி.சி., கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விலை நிர்ணயம் செய்து வருகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக என்.இ.சி.சி. நிர்ணயம் செய்யும் அதே விலைக்கு, பண்ணைகளில் வியாபாரிகள் முட்டைகளைக் கொள்முதல் செய்வதில்லை. 

 

'மைனஸ் ரேட்' என்ற பெயரில் புதியதாக ஒரு விலையை வியாபாரிகள் அறிமுகம் செய்து, முட்டை விற்பனையில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் என்.இ.சி.சி. நிர்ணயம் செய்யும் விலைக்கும், முட்டை விலைக்கும் இடையே ஒரு ரூபாய் வரை வித்தியாசம் இருக்கிறது.  

 

இந்த முரண்பாட்டைக் களைவதற்காக என்.இ.சி.சி. பல முயற்சிகளை மேற்கொண்டும் இதுவரை பயன் அளிக்கவில்லை. சில நேரங்களில், என்.இ.சி.சி.-யும் தன் விருப்பத்திற்கு விலையை உயர்த்தும். திடீரென்று 50 காசுகள் வரை குறைத்தும் விலை நிர்ணயம் செய்யும். இதற்கும், இங்குள்ள பண்ணையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், முட்டை விலை நிர்ணயத்தில் நிலவி வரும் பிரச்னைக்கு மட்டும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை. 

 

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 1) நாமக்கல்லில் என்.இ.சி.சி. மண்டல தலைவர் மருத்துவர் செல்வராஜ், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ், முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து பேசி புதிய முடிவுகளை எடுத்துள்ளனர். 

 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ''என்.இ.சி.சி.-யில் வாரத்திற்கு மூன்று நாள்கள் மட்டுமே, அதாவது திங்கள், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாள்களில் மட்டும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதே மூன்று நாள்களில், நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம் முட்டைக்கு மைனஸ் விலையை அறிவிக்கும். அதாவது, 25 முதல் 30 காசுகள் வரை மைனஸ் விலை நிர்ணயிக்கப்படும். 

 

என்.இ.சி.சி. அறிவிக்கும் முட்டை விலையும், முட்டை வியாபாரிகள் சங்கம் அறிவிக்கும் முட்டை விலையும் அதிகாரப்பூர்வமான விலையாகும். முட்டை வியாபாரிகள், பண்ணையாளர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் முட்டை விலையை அறிவித்தாலும் அதை யாரும் பின்பற்ற வேண்டாம்,'' என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

 

அது என்ன 'மைனஸ்' விலை?:

 

மைனஸ் விலை என்பது, என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையில் இருந்து தள்ளுபடி செய்து, பண்ணைகளில் எடுக்கப்படும் விலையாகும். முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை என்ற பெயரில், என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையைப் பண்ணையாளர்கள் பின்பற்றுவது இல்லை. இதனால், மைனஸ் விலையை முடிவு செய்யும் பொறுப்பை மட்டும் முட்டை வியாபாரிகள் சங்கத்திடம் என்.இ.சி.சி. ஒப்படைத்துவிட்டது. இதற்குமுன் முட்டை கொள்முதல் விலையுடன் சேர்த்தே, மைனஸ் விலையையும் என்.இ.சி.சி. அறிவித்து வந்தது. 

 

http://onelink.to/nknapp

 

நாமக்கல்லில் இருந்து முட்டையை வெளியூர்களுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவினங்களுக்காகவே மைனஸ் விலை நிர்ணயிக்கப்படுவதாக என்.இ.சி.சி. சொல்லி வந்தது. ஆனால், நடைமுறையில் மைனஸ் விலை 70 முதல் 80 காசுகள் வரை செல்வதால், என்.இ.சி.சி. இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்கு கோழிப்பண்ணையாளர்களில் ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பு மவுனம் காத்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்