வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசுகையில், 'கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கக் கூடிய உரிமை. இது உணவு தேடும் உரிமை. இதனை தமிழக அரசு பறித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கலப்படத்தை காரணம் காட்டி பறிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை நீர்க்கும் விதமாக வருகிற ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட உள்ளோம். இந்த அரசாங்கம் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு உரிய பதிலை அரசு தர வேண்டும்'' என்று பேசினார்.