சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனம், பொது மக்களிடம் கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், ஜூலை 11 ஆம் தேதி கொல்கத்தாவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. நளினி சிதம்பரம் தரப்பில் ஆஜரான டில்லி மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ் துள்சி, பெண்ணான நளினியை வேறு மாநிலத்திற்கு விசாரணைக்கு அழைக்க முடியாது எனவும், சென்னை வந்து தான் விசாரிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், நளினி சிதம்பரத்தின் மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்து மீண்டும் சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.