அரசுப் பணியாளர்களின் பணி அமர்த்தல், இடமாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் நடைபெற்று வரும் குறைபாடுகளை, முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதை முறைப்படுத்த வேண்டும், நேர்மையான முறையில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெற வேண்டும், மேலும் லோக் ஆயுக்தா சட்ட வரம்பிற்குள் இவைகளைக் கொண்டு வர வேண்டும், கரோனா நோய் பரவல் காரணத்தினால் இறந்துபோன அரசுப் பணியாளர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் நேற்று (12.02.2021) விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் வீரப்பன், இளங்கோவன், ஜெய்கணேஷ் மற்றும் அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 120 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுதலை செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.