சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஆனந்தராஜ், நீட் தேர்வை மாநில அரசு சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். தேர்தலைச் சந்திக்கும்போது மாநிலப் பிரிவைப் பற்றி பேச வேண்டும். நயினார் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் பதவியை இராஜினாமா செய்துவிட்டு பிரிவினை கோஷத்தை எழுப்பலாம் என பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஆனந்தராஜ், “செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வை மாநில அரசு சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, தேர்வுக்கு முன் ஆடைக் கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவியர் துப்பட்டா அணிவதைத் தடுக்க கூடாது. துப்பட்டாவைப் பிடுங்குவதால், மாணவியர் அவமானத்துக்கு உள்ளாகின்றனர். நீட் தேர்வுக்கு முன்பாக மாணவியரிடம் இருந்து துப்பட்டாவைப் பிடுங்குவதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளேன்.
தமிழ்நாட்டை யாருக்கெல்லாம் பிரித்துத் தரலாம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பேச்சை யார் எடுத்தாலும், பதவியைத் துறந்துவிட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்கும்போது பேச வேண்டும். அதை இப்போது சொல்லக்கூடாது. கொங்கு மக்களைப் பற்றி அரசியல்வாதிகளைவிட எனக்கு நன்றாகத் தெரியும். கொங்குநாடு என்பது மக்களின் உணர்வு அல்ல. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரிவினை கோஷத்தை எழுப்பலாம். பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அரசியல்வாதிகள், வாயைக் கட்டிக்கொள்ள வேண்டும்.
மார்க்கண்டேய அணையை நம் கண்களுக்குத் தெரியாமலேயே கட்டியுள்ளனர். கிருஷ்ணகிரியில் இருக்கும் கே.பி. முனுசாமிக்கு கர்நாடக அரசு அணை கட்டியது எப்படி தெரியாமல் போனது? கே.பி. முனுசாமி இதுகுறித்து விளக்கம் தர வேண்டும். அதிமுகவில் என்ன தவறு நடக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதிமுகவில் இருந்து இன்னும் பலர் திமுகவில் இணைய காத்திருக்கின்றனர். நான் திமுகவில் இணைந்தால் அதில் என்ன தவறு? நான் திமுகவில் இணைவதா? வேண்டாமா? என்று அவர்கள்தான் விரும்ப வேண்டும். காலம் கனியும்போது நல்ல முடிவை எடுப்பேன். தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி மேகதாது அணையைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும். இயக்குநர்களுக்கு கற்பனை சுதந்திரம் தேவை. ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில் நிறைய தவறு உள்ளது” என்று தெரிவித்தார்.