வயிற்றுப் பிழைப்பிற்காக கூலி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை, வாயைப் பொத்தி கோவிலுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாகையை கலங்கடிக்க செய்திருக்கிறது.
நாகை அடுத்துள்ள நாகூரைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான இவர், கனவனை இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி, குடும்பத்தைக் காப்பாற்ற கட்டடப் பணியில் சித்தாள் வேலைக்குச் சென்றுவருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிவரை கலவை சட்டியை சுமந்துவிட்டு, லேசான மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி வீட்டுக்கு நடந்தே சென்றிருக்கிறர். அவரைப் பின் தொடர்ந்த, கஞ்சா போதையில் இருந்த, கருங்காலிகள் இரண்டு பேர், அந்த பெண்ணை வாயைபொத்தி, ரோட்டோரமாக இருந்த பிள்ளையார் கோவிலுக்குள் தூக்கிச் சென்று கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளனர்.
“பொழுது முழுவதும் சிமெண்ட் கலவை சட்டியையும், செங்கல்லையும், சுமந்து உடல் சோர்ந்து நடக்கவே முடியாத நிலையிலும் பஸ்ஸுக்கு கொடுக்கும் பயணக் கட்டணத்தை, பிள்ளைகளுக்கு பயண்படுத்தலாமே என்று உடல் வலியையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்றிருக்கிறார். அந்த பகுதி எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். ஆனால், நேற்று இரவு லேசான மழையால் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கிறது. இதனை சாதகமாக்கிக்கொண்டு அந்த அப்பாவி பெண்ணை தூக்கிச் சென்று சிதைத்துள்ளனர். இதில் சம்மந்தபட்ட ஆனந்தராஜ், அற்புதராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம் ‘இது குறித்து புகாரோ, வெளியில் யாரிடமோ சொன்னால் குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம்’ என மிரட்டியிருக்கிறார்கள். கொடூரத்தையும் செய்துவிட்டு வீட்டிற்கே சென்று மிரட்டும் அளவிற்கு குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது” என்கிறார்கள் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்கள்.
"வெளிப்பாளையம் காவல் நிலையம், நாகை நகரத்தின் மையத்தில் இருக்கிறது. காவல் நிலையத்தைச் சுற்றி கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. இது காவல் நிலையத்திற்கு முழுமையாக தெரியும். காவல் நிலையம் அருகிலேயே நீதிமன்றங்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இருக்கின்றன, அதே வேளையில் குற்றவாளிகளின் கூடாரங்களாகவும் அந்தப் பகுதி இருப்பதுதான் வேதனை" என்கிறார் அரசியல் பிரமுகர் ஒருவர்.