தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 232 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இரு அமைச்சர்களுக்கும் கரோனா உறுதியான நிலையில், அவர்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதனால் இன்றைய தினம் சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதைத் தொடர்ந்து, அவை முனைவர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அகர வரிசைப்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளனர்.
இதனிடையே, திமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு. பிச்சாண்டி ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுத்தாக்கலின்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
சட்டப்பேரவையில் திமுகவுக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளதால், அப்பாவும் கு. பிச்சாண்டியும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கலைவாணர் அரங்கிற்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.