நாகையை அடுத்த நாகூரில் அமைந்துள்ள மீனவர்களின் வழிபாட்டு கடவுளில் ஒருவரான குட்டியாண்டவர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது ஏராளமான மீனவர்கள் குடும்பத்தோடு படகில் வந்து வழிபாடு செய்தனர்.
மீன்வளத்தை பெருக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து காக்கவும் நாகை மாவட்டம் நாகூர் வெட்டாற்றின் அக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு குட்டியாண்டவர் ஆலயம் மீனவர்களின் முக்கிய கடவுளாக விளங்கிவருகிறது. கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சில தினங்களாக யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து திரவியஹிதி பூர்ணாஹிதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்பு யாகசாலையில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் கடங்கல் புறப்பட்டு ஸ்ரீ அருள்மிகு குட்டியாண்டவர் கோவில் விமானத்தை சென்றடைந்தது. தொடர்ந்து மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்பு கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ அருள்மிகு குட்டியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.
வெட்டாற்றின் அக்கரைப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் ஏராளமான மீனவர்கள் குடும்பத்தோடு படகில் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.