![Nagai MP Selvaraj was laid to rest with the respect of the govt](http://image.nakkheeran.in/cdn/farfuture/YAFTQv_vs9CTVlXoLjV4VmLxPV4VxZAFOaBBRgxNoDI/1715672414/sites/default/files/inline-images/nagai-selvaraj-art-2_0.jpg)
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் எம். செல்வராஜ் (வயது 67). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இத்தகைய சூழலில் எம். செல்வராஜ் எம்.பி. சிகிச்சை பலனின்றி நேற்று (13.05.2024) அதிகாலை காலமானார். மறைந்த எம். செல்வராஜ் கடந்த 1989, 1996, 1998 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![Nagai MP Selvaraj was laid to rest with the respect of the govt](http://image.nakkheeran.in/cdn/farfuture/huFD2Cc0G9Rl3MwVZ5u99HU3ZZ8Xyojlv7hdyxp3-pw/1715672443/sites/default/files/inline-images/nagai-selvaraj-last-art.jpg)
இந்நிலையில் நாகை எம்.பி. செல்வராஜியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் அவரது உடலுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணன், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் செல்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து செல்வராஜியின் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த அரசு மரியாதை நிகழ்வானது திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.