கஜா புயலுக்கு பிறகும் நாகை மாவட்டத்தில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த பத்து மாதங்களாக நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யாததால் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வந்தனர். கோடை காலத்தில் துளி அளவுக்கூட மழை பெய்யவில்லை. இதனால் வரலாறு காணாத வறட்சியும், தண்ணீர் பஞ்சமும் நிலவியது. மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த சூழலில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த போதிலும் நாகை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டியெடுத்தது. இந்த நிலையில் இன்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் நிலவியதோடு, நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் நாகையில் பெய்த மழையால் கடைமடை பகுதியான நாகை மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.