விழுப்புரம்- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியதில் மோசடி நடந்திருப்பதாக நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் பாதிக்கப்பட்ட 500- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்- தூத்துக்குடி இரு வழிச்சாலையை 6 ஆயிரத்து 431 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை, நாகை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தியது.

இதில் 2016 ம் ஆண்டு நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலங்கள் நெடுஞ்சாலைத்துறை நில ஆர்ஜித அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன. நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலம் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் 52 பேருக்கு சதுர அடிக்கு அரசு நிர்ணயித்த 4 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக வெறும் 40 ரூபாய் மட்டுமே அவர்களது வங்கி கணக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இரு தினங்களுக்கு முன் வரவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தி மோசடி செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. நாகை புத்தூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நிலத்தை இழந்தவர்கள் குடும்பத்தோடு பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி," நான்கு வழி சாலை திட்டத்தை பொதுமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. நிலம் வழங்கியவர்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும் என்று தான் கூறுகிறார்கள், மோசடியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சம்மந்தபட்ட மக்களையோ, மக்களின் பிரதிநியையோ தமிழக முதல்வர் அழைத்து பேச வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்."என்றார்.