வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மகன் ஸ்வேதா. 4 வயதாகும் ஸ்வேதாவுக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. சாதாரண காய்ச்சல்தான் என அருகில் உள்ள ஒரு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஜீலை 8 ந்தேதி இரவில் இருந்து அதிகமாக காய்ச்சல் இருந்துவந்துள்ளது. இதனால் ஜூலை 9ந்தேதி காலை ஸ்வேதாவை திருப்பத்தூர் அரசுமருத்துவமனைக்கு தூக்கி வந்துள்ளனர். அப்படி வரும்போதே குழந்தை ஸ்வேதா இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான பெற்றோர் அழுகையுடன் குழந்தையை வீட்டுக்கே திருப்பி தூக்கி சென்று இறுதி மரியாதைக்கான வேலைகளை செய்து அடக்கம் செய்துள்ளனர்.
மர்ம காய்ச்சலால் குழந்தை இறந்த தகவலை கேள்விப்பட்ட சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி தலைமையிலான குழு, அந்த கிராமத்துக்கு சென்று இறந்த குழந்தையின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அந்த வீட்டை சுற்றியும், அந்த தெரு, கிராமம் முழுவதும் கொசு மருந்து அடிப்பது உட்பட சுகாதார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுப்பற்றி அப்பகுதி இளைஞர்கள் கூறும்பொழுது, இங்கு கிராம செவிலியர்கள் என யாரும் வருவதில்லை. அதோடு, எங்களுக்கு ஏதாவது நோய் என்றாலும் திருப்பத்தூர் தான் செல்ல வேண்டியுள்ளது. இந்தப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுகிறது. எதனால் பரவுகிறது எனத்தெரியவில்லை என சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இப்போது ஒரு குழந்தை இறந்தபின் வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இதனை முன்பே செய்திருந்தால் ஒரு குழந்தையின் உயிர் போயிருக்காதே, இதற்கு யார் பதில் சொல்வது என கேள்வி எழுப்புகின்றனர்.