
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பாச்சலூரில் வசித்து வருபவர் சத்யராஜ். இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் மூன்று குழந்தைகளும் பார்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர். இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) காலை 11 மணி அளவில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், திரும்பவும் வகுப்பறைக்கு வரவில்லை. இந்நிலையில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பாதி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை மிகவும் ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக தாண்டிகுடி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பள்ளியில் உள்ள 3 ஆசிரியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவியின் பிரேதத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே குழந்தையின் மர்ம மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்த பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், எஸ்.பி.சீனிவாசன் மற்றும் வருவாய் துறையினர் இறந்து போன குழந்தையின் பெற்றோர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், அதோடு பள்ளியில் பணி புரிந்து வந்த ஆசிரியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது என உறுதி அளித்ததின் பேரில் குழந்தையின் பிரேதத்தை வாங்க பெற்றோர்கள் ஒத்துக்கொண்டனர்.
இதனை அடுத்து பிரேத பரிசோதனை முடிந்த உடன் பெற்றோரிடம் குழந்தையின் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில்குமார் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் மின்மயானத்தில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.