தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் தொடக்கத்திலிருந்தே பல்வேறு குழப்பங்களை கொண்டதாக இருக்கிறது.
குறிப்பாக வார்டு வரைமுறை பணியில் சரியாக செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில் நாங்கள் சரியாகத்தான் தேர்தலை நடத்துகிறோம் என அறிவித்தது தமிழக தேர்தல் ஆணையம் ஆனால் வார்டு வரை முறையில் குழப்பங்கள் தொடர்ந்து இருந்து வந்ததை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சியில் 1வது வார்டு அய்யம்பாளையம் என்ற பகுதி இங்கு கலைவாணர் வீதியில் 362 வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் 171 பேர் ஒன்னாவது வார்டிலும் 191 பேர் இந்த ஊரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளியுள்ள நான்காவது வார்டிலும் வாக்களிக்கும் படி அதிகாரிகள் வார்டு வரைமுறையில் குழப்பம் செய்திருந்தனர்.
ஒரே குடும்பத்தில் வசிக்கும் கணவன் மனைவியை பிரித்து கணவன் அதே ஊர் வாக்குச்சாவடியிலும் மனைவி நான்கு கிலோ மீட்டர் தள்ளி உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஒட்டுப்போட வேண்டிய நிலை இருந்தது. இந்த குழப்பத்தை போக்குங்கள் கணவன், மனைவியை ஏன் பிரிக்கிறீர்கள் என கேள்வி கேட்டு சென்ற ஒரு மாதமாக இந்த வாக்காளர்கள் மனு கொடுத்தனர், போராட்டமும் செய்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று அந்த 362 வாக்காளர்களும் தேர்தலை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். முறைப்படி வார்டு வரைமுறை செய்யப்பட்டுத் தான் தேர்தல் நடக்கிறது என்று அதிகாரிகள் கூறியது வெற்று அறிவிப்பு என்பது அய்யம்பாளையம் கிராம வாக்காளர்கள் மூலம் தெரிந்தது.