இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இன்று (24.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன், “உலகம் நான்காவது கரோனா அலையைச் சந்தித்துவருகிறது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்புகள் 1.5 - 3 நாட்களுக்குள் இரட்டிப்பாகும். எனவே, கரோனா பாதுகாப்பு நடத்தையைப் பின்பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என எச்சரித்துள்ளார்.
ஒமிக்ரான் குறித்த அச்சமும் தீவிரமடைந்துள்ள நிலையில், கரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் அச்சம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் சில மாநிலங்களிலும், நகரங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்குவந்துள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று இதுதொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஒமிக்ரான் பரவல் தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து கடை, வணிக வளாகம், திரையரங்குகளுக்கு வழங்கியுள்ள நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.