
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 12வது போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (31.03.2025) நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பு 116 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணி சார்பில் அஷ்வனி குமார் 4, தீபக் சாகர் 2, க்ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக அங்கிரிஸ் ராகுவான்ஸி 16 பந்துகளில் 26 ரன்களையும், ராமன்தீப் சிங் 12 பந்துகளில் 22 ரன்களையும், மானிஷ் பாண்டே 14 பந்துகளில் 19 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் மும்பை அணி வெற்றி பெற 117 ரன்களை இலக்காகக் கொல்கத்தா அணி நிர்ணயித்தது.
இதன் மூலம் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. இதனையடுத்து மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். அதே போன்று சூர்யகுமார் யாதவும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். மேலும் வில் ஜேக்ஸ் 17 பந்துகளில் 16 ரன்களையும் குவித்தார். அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அஸ்வினி குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதே சமயம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை மும்பை அணி வீரர் அஸ்வனி குமார் (வயது 23) படைத்துள்ளார். அதாவது அஸ்வனி குமார் அறிமுக போட்டியில் 3 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.