வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் ஒரு பெண்மணி ஒரு மூட்டை அரிசியை சுமந்துக்கொண்டு சென்றுள்ளார். அதனை அந்த வழியாக சென்ற வட்ட வழங்கல் அலுவலர் குமார் பார்த்துள்ளார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண் பெரியபேட்டை பகுதியில் பாபு என்பவரின் வீட்டின் முன் அரிசி மூட்டையை இறக்கி வைத்துள்ளார். அப்போது தன்னை பின் தொடர்ந்து அதிகாரிகள் வருவதை பார்த்து மூட்டையை வைத்து விட்டு ஓடியுள்ளார்.
இதனை பார்த்த அதிகாரிகள் ஓடி அந்த பெண்மணியை பிடித்து வந்து விசாரித்தபோது, தன் பெயர் மல்லிகா என்றும், இது ரேஷன் அரிசி என்றும் கூறியுள்ளார். அந்த பெண்ணை பிடித்து வந்து பாபு என்பவரின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கே அங்கே ரேஷன் அரிசி 48 மூட்டைகள் மொத்தம் 2500 கிலோ இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில் அந்த அரிசி மூட்டைகள் ஆந்திராவுக்கு கடத்த வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மல்லிகா, பாபு மீது புகார் தந்து காவல்துறையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.