முரசொலி நிலம் தொடர்பான வழக்கை பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2019ம் ஆண்டு பா.ஜ.க. நிர்வாகியான ஸ்ரீனிவாசன் என்பவர் தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது தேசிய எஸ்.சி./எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல். முருகன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த நோட்டீஸை ரத்து செய்யவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலரான ஆர்.எஸ். பாரதி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்சி./எஸ்டி ஆணையம், சொத்தின் உரிமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தாலும், அந்த நிலம் ஏற்கனவே பட்டியலினத்தோருக்கு ஒதுக்கப்பட்டதா எனும் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என ஆணையத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று (10ம் தேதி) நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தீர்ப்பளித்துள்ளார். அந்தத் தீர்ப்பில், ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடரலாம். அதேபோல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிலும் விளக்கம் பெற்று உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.