தாராவி உட்பட மும்பையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வர தமிழக அரசு உதவ வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பகுதியான தாராவியில், மக்கள் நெருக்கம் காரணமாக கரோனா பரவல் தீவிரமாக காணப்படுவதால் மக்கள் அச்சத்தால் சொந்த ஊர்களுக்கு திரும்ப போக்குவரத்து வசதியை எதிர்பார்த்துள்ளனர்.
தாராவியில் சிகிச்சை பெறுவதற்கான போதிய மருத்துவ வசதி இல்லை எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் நெருக்கமாக செல்வதால் நோய் பரவுதல் அதிகரிக்கிறது.
அதுமட்டுமன்றி, பெரும்பாலான தமிழர்கள் குடியிருப்புகளை காலி செய்து ஊர்களுக்கு திரும்புவதற்கு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேலும், பணிக்காக அங்கு சென்றவர்களை பிரிந்து தமிழகத்தில் வசிப்பவர்களும் அவர்களின் நிலையறிந்து தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
எனவே, தமிழக அரசு தாராவி உட்பட மும்பையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசின் சுகாதார நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ரெயில் மூலம் மீட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.