
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்காததால் பள்ளி மாணவி ஒருவர் ஆபத்தான முறையில் ஓடிச் சென்று பேருந்தில் ஏறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து கோத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது பேருந்துக்காக காத்திருந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த பேருந்தை பின் தொடர்ந்து ஓடியுள்ளார்.
சிறிது தூரம் ஓடிய நிலையில் பேருந்தில் இருப்பவர்கள் மாணவி ஒருவர் பேருந்து ஓடி வருவதாக ஓட்டுநரிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டு பின்னர் மாணவி பேருந்தில் ஏறினார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.