தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, கடந்த 2014- ஆம் ஆண்டு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையைக் கண்காணித்துப் பராமரிக்க மூவர் குழுவை நியமித்திருந்தது.
தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மைப் பொறியாளர் குல்ஷன்ராஜ் உள்ளார். அதேபோல், தமிழக அரசின் பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், கேரள அரசின் பிரதிநிதியாக கேரள நீர்வளத்துறை செயலர் டி.கே.ஜோஸ் உள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி 28- ஆம் தேதி அன்று மூவர் கண்காணிப்புக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்த மூவர் கண்காணிப்புக் குழுவினர் இன்று (19/02/2021) முல்லைப் பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்தனர்.
மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்சன் ராஜ், கேரள பிரதிநிதியான கேரள நீர்வளத் துறை செயலர் டி.கே.ஜோஸ், காவேரி தொழில் நுட்பக்குழுத் தலைவர் சுப்பரமணி மற்றும் துணைக்குழுவான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.
முன்னதாக கேரள மாநிலம், தேக்கடி படகுத் துறையில் இருந்து தமிழக படகில் மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்சன் ராஜ் மற்றும் தமிழக அதிகாரிகளும், கேரள படகில் கேரள அதிகாரிகளும் அனணயை ஆய்வு செய்வதற்காகக் கிளம்பிச் சென்றனர். இக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, ஷட்டர் பகுதி, அணையின் நீர்க்கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசின் பிரதிநிதியாக உள்ள தமிழகப் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகன் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.