சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதற்கு மாற்றாக சமஸ்கிருத வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழை அழித்து, சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கான இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு சார்பில் தேசியத் துறைமுகம், நீர்வழிகள், கடலோரத் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை ஐ.ஐ.டியில் இன்று காலை நடைபெற்றது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதிக் கட்கரி, இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் ‘மகாகணபதி’ என்று தொடங்கும் சமஸ்கிருத மொழி வாழ்த்துப் பாடலை மாணவர்கள் பாடினார்கள். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு விழாக்களாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக சமஸ்கிருத வாழ்த்துப் பாடலை திட்டமிட்டு இசைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழை புறக்கணிக்கும் வகையில் சமஸ்கிருதப் பாடலை இசைத்ததற்காக சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இந்த நிகழ்வை எதிர்பாராமல் நடந்த நிகழ்வாக பார்க்க முடியவில்லை. மாறாக, தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் நோக்குடன் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான முயற்சிகளின் தொடர்ச்சியாகவே ‘மகாகணபதி’ சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டதாகத் தோன்றுகிறது.
சமஸ்கிருத வாழ்த்துப் பாடல் பாடப்பட்டதை விட அதற்காக ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி அளித்துள்ள விளக்கம் மிகவும் கொடுமையானது. ‘‘சமஸ்கிருத பாடலை பாட ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. மாணவர்களே தாமாக வந்து பாடினர்’’ என்று அவர் கூறியதை வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்டு தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஐ.ஐ.டி வளாகத்தில் ஜனநாயகம் என்பதற்கு இடமில்லை என்பதும், மாணவர்கள் தன்னிச்சையாக எதையும் செய்து விட முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே. ஐ.ஐ.டி நிர்வாகத்தின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வுகள் அண்மையில் கூட நடந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது மாணவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள நிர்வாகம் முயலக்கூடாது.
சென்னை ஐஐடி அமைந்துள்ள நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டதாகும். ஆனால், அந்த வளாகம் தமிழுக்கும், தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, ஐ.ஐ.டி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாததற்காக மன்னிப்பு கேட்பதுடன், இனிவரும் காலங்களில் ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.