பத்து மாதங்கள் சுமந்து பெற்ற பிள்ளையை, நாம் கவனிக்கத் தவறிய பத்தே நொடிகளில்.. பத்தே நிமிடங்களில் பறிகொடுத்து விடுகிறோம். 2 வயது சுஜித்துக்கு ஆழ்துளைக்கிணறென்றால், 3 வயது ருத்ரனுக்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டியே எமனாகிவிட்டது.
கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மூர்த்தியின் மகன்தான் ருத்ரன். இச்சிறுவன், விருதுநகர் மாவட்டம் – ஒண்டிப்புலி நாயக்கனூரிலுள்ள தாத்தா மணிகண்டன் வீட்டுக்கு வந்திருந்தான். இன்று காலை 6-30 மணியளவில் வீட்டிலுள்ளவர்கள் டீ குடித்தபோது அங்கு விளையாடிக்கொண்டிருந்தான். நீண்டநேரமாகியும் கண்ணில் தட்டுப்படாததால் அக்குடும்பத்தினர் அவனைத் தேடினர். அப்போது, வீட்டிலிருந்து 10 அடி தூரத்தில், 5 அடி ஆழம் 3 அடி அகலத்தில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர்த்தொட்டி மூடப்படாத நிலையில் நிரம்பியிருந்தது. அதில் தவறி விழுந்து கிடந்தான் ருத்ரன். அரக்கப்பரக்க அவனைத் தூக்கிக்கொண்டு ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டான் என்று கூற, குடும்பத்தினர் அலறித் துடித்தனர். ஆமத்தூர் காவல் நிலையம் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.
நேற்று சுஜித்! இன்று ருத்ரன்! இனி, எந்தக் குழந்தையும் இதுபோன்ற மரணத்தைச் சந்திக்கவே கூடாது என்பது நம் கையில்தான் இருக்கிறது.