திருவண்ணாமலை மலை 2237 அடி உயரமுடையது. 14 கி.மீ சுற்றளவுள்ள இந்த மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வலம் வருகிறார்கள். இந்த மலையின் ஒருப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டிலும், கொஞ்சம் பகுதி வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மிக வேகமாக குடியிருப்புகள் உருவாகிவிட்டன.
மலையில் சாலைகள் போடப்பட்டுவிட்டன, மின்வசதிகள் செய்துதரப்பட்டுவிட்டன. தரையில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்துக்கு மேல் வீடுகள், ஆஸ்ரமங்கள் உருவாகிவிட்டன. இந்த ஆஸ்ரமங்களுக்கு செல்லும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் வழி தெரியாமல் மலைகள் மற்றும் காடுகளுக்குள் போய் சிக்கிக்கொள்கிறார்கள்.
கடந்த மாதம் ஒரு பீகார் வாலிபனும், ஒரு வாரத்துக்கு முன்பு வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் மலை மீது ஏறியவர்கள் வழித்தெரியாமல் வேறு இடங்களில் போய் சிக்கிக்கொண்டனர். அவர்கள் தங்களிடமிருந்த செல்போன் மூலம் நண்பரு1க்கு தகவல் சொல்ல அவர்கள் வழியாக காவல்துறைக்கு புகார் போய் வனத்துறை மற்றும் காவல்துறையினர் தேடி கண்டுபிடித்தனர். இதில் வடமாநில இளைஞர் கால் உடைந்துப்போய் 2 நாட்களுக்கு பின்பே கண்டுபிடிக்கப்பட்டு தூக்கிவரப்பட்டார்.
இதனால் நொந்துப்போய்விட்டனர் வனத்துறையினர். வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் மலையை சுற்றி இடங்கள் உள்ளதால் அவர்களால் அந்த இடத்தை பாதுகாக்க முடியவில்லை. இதனால் மலைப்பகுதி வீடுகளாக மாறுகின்றன. சட்டவிரோத காரியங்கள் நடைபெறுகின்றன என்கின்றனர் வனத்துறையினர்.
அதனால் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள். அப்படி வருவதன் மூலம் மலையை பாதுகாக்க முடியும் என்கிறார்கள்.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் முழுவதாக மலை வந்துவிட்டால் கார்த்திகை தீபத்தின் போது மட்டும் பக்தர்கள் மலையேறி சிவன் பாதத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும். மற்ற நாளில் மேலே ஏறுவது தடை செய்யப்படும். இதனால் சாதாரண நாட்களில் எந்த தகவலும் சொல்லாமல் மலை மீதேறி தொலைந்து போகிறவர்களை தடுக்க முடியும், முறையற்ற அனுமதி பெறாத ஆஸ்ரமங்கள் கட்டுப்படுத்தப்படும், புதிய வீடுகள் உருவாகாமல் தடுக்கப்படும், இதன் மூலம் மலையை பாதுகாக்க முடியும் என அந்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஏற்பாடு இந்து அமைப்புகளிடமும், சமூக நல அமைப்புகளிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதற்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை.